valikandapuram Seth Mariamman Temple therottam near in perambalur

பெரம்பலூர் : வாலிகண்டபுரம் சேத்து மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன தொடங்கி நடந்து வருகிறது.

தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் பங்களிப்புடன் சேத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று நாடு நலம் பெற வேண்டியும், மழை வளம் வேண்டியும் மாரிம்மனுக்கு பக்தர்கள் சக்தி அழைத்து, பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு வழிபாடு நடத்தினர் மற்றும் சுவாமி வீதிஉலா நடந்தது.

அதைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாரியம்மன் வெடி, மேள தாளங்கள், முழங்க திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் மாலை 5 மணியளவில் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் கூடிநின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்தில் தேவையூர், மங்களமேடு, ரஞ்சன்குடி, பசும்பலூர், கீழப்புலியூர் உட்பட சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலிசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!