With the lack of ministers, Perambalur Ignore the government in offering new buses
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் திமுகவை சேர்ந்த மத்திய மந்திரி ஆ.ராஜா இருந்தார். மத்திய அமைச்சராக இருந்த போதிலும், திமுக மாநில ஆட்சியில் இருந்த போது பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். மாநில அரசின் அனைத்து திட்டங்களிலும், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வழங்கபட்டன.
ஆனால், தற்போது, மாநில அரசில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் அமைச்சர்களாக இல்லை. இரண்டு எம்.எல்.ஏக்களே உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய பேருந்துகளை வழங்கியது.
இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளையும், திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் அமைச்சர்கள் பகிர்ந்து கொண்டதால் பெரம்பலூருக்கு இம்முறை புதிய பேருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.
மேலும், கடந்த ஆட்சிகளின் போது ஒவ்வொரு முறையும் புதிய பேருந்துகளை அரசு வழங்கும் போதும் குறிப்பிட்ட பேருந்துகளை ஒதுக்குவது வழக்கம், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஓட்டை உடைசல் பேருந்துகளே சத்தத்துடன் இயங்கி வருகின்றன.
பக்கத்து மாவட்டத்தில், ஓடும் பேருந்துகளை பார்த்த பொதுமக்கள் இம்முறை அரசு பேருந்து ஒதுக்கீட்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போக்குவரத்துறை அமைச்சர் கரூர் விஜயபாஸ்கரும், திட்டமிட்டே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை புறக்கணித்ததாக கருதுகின்றனர்.
அதனால், பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான புதிய பேருந்துகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.