அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள், பசுமைவழிச்சாலை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மூலம் எதிர்ப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சேலம் மாவட்டம், எடப்பாடியில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டர். அப்போது விழாவில் பேசிய அவர், இந்தியாவிலேயே, தமிழக விவசாயிகளுக்கு மட்டும் தான் அதிக இழப்பீடு வழங்கப்படிப்பட்டிருப்பதாக கூறினார். அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள், பசுமைவழிச்சாலை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மூலமாக பச்சைப் பொய்களைக் கூறி எதிர்ப்பதாக குற்றம்சாட்டினார். கனிமளவளங்களை எடுப்பதற்காக சாலை அமைக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு சென்னை – சேலம் இடையிலான தொலைவு 60 கிலோ மீட்டர் குறையும் என்றார். இதனால் வாகனங்களின் வாடகை குறைவதுடன்,அத்தியாவசியப் பொருட் களின் விலையும் குறையும் என்றார். பசுமை வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.