13 were released on bail in a murder case Gokulraj cancellation of the bail : Namakkal court

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 13 பேரின் ஜாமீனையும் நாமக்கல் நீதிமன்றம் ரத்து செய்து இன்று உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி(பெண்), ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், கார் டிரைவர்அருண் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜோதிமணி அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 14 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விசாரணை நீதிமன்ற நீதிபதியான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் உத்தரவிட்டிருந்தார்.

அமுதரசு என்பவரை தவிர 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதால், அவரை தவிர்த்து 13 பேரின் ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாத அமுதரசு என்பவருக்கு நீதிபதி பிடியாணை பிறப்பித்தார். இதனையடுத்து ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 12 பேரை போலீஸார் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

ஜாமீன் ரத்துக்குக்கான காரணம்:

14 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற வட்டாரம் மற்றும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவித்தது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் நீதிபதியை நோக்கி ஆவேசமாக பேசினார்.

இதனால் நீதிமன்றத்தை அவர் அவமதித்தாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள 14 பேரின் ஜாமீன் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜ்க்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டே வழக்கை தாமதப்படுத்தி வருவதாகவும், விசாரணைக்கு ஆஜரவதில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனவும் சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இந்த நிலையில் தான் அனைவரின் ஜாமீனையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!