Action against the installers of banners and advertisements without permission; Perambalur Collector!

Photo Credit : Perambalur.nic.in
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பிரதான சாலைகள், இணைப்புச் சாலைகள், சாலை சந்திப்புகள், சாலையின் மையப் பகுதிகள், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்கள், தனியார் கட்டிடங்களின் மீதும் விளம்பரப் பலகைகள், பதாகைகள், டிஜிட்டல் விளம்பரத் தட்டிகள் மற்றும் பேனர்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் அமைக்கப்படும் முன்பு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெற்ற பின்னர் அதில் இடம்பெறும் விளம்பரம் குறித்து தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து, அதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விளம்பரக் கட்டணம் செலுத்தி அனுமதியைப் பெறவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் நிறுவப்படும் விளம்பரங்கள் முறையற்றவையாகும். இத்தகைய அனுமதி பெறாத கட்டமைப்புகளால் பொதுமக்களுக்குப் பலவகையிலும் ஆபத்து ஏற்படுகிறது. சாலையோரங்கள் மற்றும் சாலை நடுவே விதிகளை மீறி அனுமதி பெறாமல் நிறுவப்படும் இத்தகைய விளம்பரப் பலகைகளால் வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறடிக்கப்பட்டு, விபத்துக்கள் நேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
எனவே, உடனடியாக அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள், பதாகைகள் குறித்துக் கணக்கெடுப்பு செய்யவும், அவற்றை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், கணக்கெடுப்பு செய்வதையும், அகற்றுவதையும் கண்காணிக்க அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தினசரி அறிக்கைகள் சமர்ப்பிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி பதாகைகள், விளம்பரங்கள் நிறுவுவோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.