Chennai: From tomorrow, private milk, curd sales price increase!
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால் தயிர் விற்பனை விலையை இன்று மாலை பில் மூலம் நாளை வெள்ளிக்கிழமை காலை முதல் லிட்டருக்கு 2.00 ரூபாய் உயர்த்துவதாக அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 500மிலி பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், 1லிட்டர் பாக்கெட் 65.00ரூபாயில் இருந்து 67.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 500மிலி பாக்கெட் 31.00ரூபாயில் இருந்து 32.00ரூபாயாகவும், 1லிட்டர் பாக்கெட் 58.00ரூபாயில் இருந்து 60.00ரூபாயாகவும், 400கிராம் தயிர் பாக்கெட் 30.00ரூபாயில் இருந்து 32.00ரூபாயாகவும், 500கிராம் தயிர் 37.00ரூபாயில் இருந்து 38.00ரூபாயாகவும், 1கிலோ தயிர் 66.00ரூபாயில் இருந்து 68.00 ரூபாயாகவும் உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளதோடு, பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்கான எந்த ஒரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த விற்பனை விலை உயர்வானது தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நவம்பர் 7ம் தேதி பில் மூலம் 8ம் தேதி முதல் அமுல்படுத்துவதாக ஆரோக்யா நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருப்பது நுகர்வோராகிய பொதுமக்கள் தலையில் பெரும் பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் கடந்த 2023ம் ஆண்டில் பால் மற்றும் தயிர் விற்பனை கடும் சரிவை சந்தித்த நிலையில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை வரலாறு காணாத வகையில் குறைத்து கொள்முதல் செய்ததும், அதன் பிறகு கடந்தாண்டு நவம்பர் மாதம் இறுதியில் (24.11.2023) நுகர்வோருக்கான பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது, என அச்சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.