Chitra Poornima festival temple Siruvachur madurakaliamman Temple
பெரம்பலூரை அருகே உள்ள சிறுவாச்சூரில், மதுரகாளிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் சித்திரை பவுர்ணமி விழா நடத்தப்படுகிறது. விகாரி ஆண்டின் சித்திரை பவுர்ணமி விழா இன்று விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் ஸ்ரீசண்டி ஹோமம் நடந்தது.
இதற்கிடையில் கோவில் தங்கரத பிரகாரத்தில் மதுரகாளிஅம்மன் உற்சவ சிலை வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு காலை 8மணி முதல் மதியம் வரை ஸ்ரீசிவானந்த லகரி, ஸ்ரீசவுந்தர்ய லகரி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.
இதில் சென்னை, நாமக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து அம்பாளை வழிபட்டனர்.
விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகாநந்த பரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை வகித்து சண்டி ஹோமத்தை நடத்திவைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதனைத்தொடர்ந்து மதுரகாளிஅம்மன் கோவில் மண்டபத்தில் மகா அன்னதானம் நடந்தது.
ஸ்ரீசண்டி ஹோமம் மற்றும் சகஸ்ரநாம குங்குமஅர்ச்சானை ஏற்பர்டுகளை ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் மற்றும் மகாமேரூ மண்டலியின் ஆன்மீக மெய்யன்பர்கள் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
வழக்கமாக மதுரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வாரத்தில் மகாவீர் ஜெயந்தி, பொதுத் தேர்தல், புனிதவெள்ளி என தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருந்ததால், வெள்ளிக்கிழமையும், சித்திரை பவுர்ணமியும் ஒரே நாளில் வந்துவிட்டதால், கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
படவிளக்கம்: சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவிலில் சித்திரைபவுர்ணமி விழாவை ஒட்டி ஸ்ரீசண்டி ஹோமம் நடந்தபோது எடுத்தப்படம்