Handing over the power to issue factory licenses to the Collector; PMK leader Anbumani condemns!

தொழிற்சாலை உரிமம் வழங்கும் அதிகாரத்தை உள்ளாட்சிகளிடம் இருந்து பறித்து, கலெக்டரிடம் ஒப்ப்படைப்பது, மாநில தன்னாட்சி கோரும் திமுக, உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம்? என
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் சிப்காட் வளாகங்கள் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு உரிமம் வழங்குவதற்கும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்திருக்கும் தமிழக அரசு, அந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்திருக்கிறது. உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்டு எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் (Tamil Nadu Panchayats Act, 1994) செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் அடிப்படையில் இந்த அதிகார மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஏதேனும் ஒரு பகுதியில் புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டுமானால், அது குறித்து அப்பகுதியின் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் தான் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பது தான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்குத் தான் தெரியும்; அந்த பாதிப்பை அனுபவிக்கப் போகிறவர்கள் அவர்கள் தான். அதனால், தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பறித்தது நியாயமல்ல.

 1949-ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் மாநில தன்னாட்சி என்ற முழக்கத்தை தான் முன்வைத்து போராடி வருகிறது. ஆனால், 1967-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்காமல் உள்ளாட்சிகளிடம் இருக்கும் அதிகாரத்தைப் பறிப்பதைத் தான்  வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இது தான் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.  அந்த வேடத்தைக் கலைத்து விட்டு, 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில்   செய்யப்பட்டுள்ள திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். தொழி்ற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமே ஒப்படைக்க வேண்டும், என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!