If the Viskarma scheme is a kula kalvi scheme, why is the Chief Minister naming it after his father? TTV Dinakaran questions?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி திட்டம் என்றால் மாநில அரசின் கைவினைத் திட்டம் குலத்தை வலுப்படுத்தும் திட்டமா ? தந்தையின் பெயரை சூட்டுவதற்காகவே திட்டங்களை உருவாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு கண்டனத்திற்குரியது.
நகை செய்தல், சிகையலங்காரம், காலணிகள் தயாரித்தல், சுடுமண் வேலைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு பயிற்சி, பிணையற்ற கடன் உதவி, வட்டி மானியம் வழங்கும் வகையில் “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தமிழக அரசு உருவாக்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியால், கொண்டு வரப்பட்ட விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் எனக்கூறி அதனை செயல்படுத்த முடியாது என அறிவித்த முதல்வர், தற்போது அதே சிறப்பம்சங்களை உள்ளடக்கி கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியிருப்பதன் நோக்கம் என்ன ? கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களை காப்பியடித்து தன் தந்தையின் பெயரில் திட்டங்களை உருவாக்குவது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சமூகநீதியா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர, தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை உருவாக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன், என தெரிவத்துள்ளார்.