பெரம்பலூர் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் உள்ள எடை குறைந்த குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் இன்று (07.09.16) பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமணையில் நடைபெற்றது.
இம்முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நல மருத்துவர்கள் மூலமாக எடை, கை சுற்றளவு மற்றும் உயரங்கள் பரிசோதிக்கப்பட்டது. மேலும் எடை குறைவு எதனால் ஏற்படுகிறது, குழந்தைகள் வயதிற்கேற்ற எடை இருக்கிறார்களா என்பதையும் பரிசோதனை செய்தனர். மேலும் அவ்வாறு எடை குறைந்து காணப்படுவதற்கான காரணங்களையும் ஆய்வு செய்தனர்.
இம்முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளில் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கவும், மிகவும் கடுமையான எடைக்குறைவுள்ள குழந்தைகளை தகுந்த சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். மேலும், குழந்தைகளின் எடை குறைவிற்கான காரணங்களை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்கும் போது குழந்தைகளால் சரியான வளர்ச்சி பெற முடியும். எனவே, கடுமையான எடைக்குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அங்கன்வாடிப் பணியாளர;கள் தீவிரமாக கண்கானிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்யவும் மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.
இன்றைய முகாமில் 11 குழந்தைகள் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்தில் உள்நோயாளியாகவும், 2 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கும், 2 குழந்தைகள் இருதய நோய் சிறப்பு சிகிச்சை முகாமிற்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் கடலை பருப்பு, வெல்லம், நெய் ஆகியவை அடங்கிய பை வழங்கப்பட்டது. மேலும் நாளை (08.09.16) ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்டபட்ட குழந்தைகளுக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமீனாள், அரசு மருத்துவமனை ஊட்டச்சத்து மறுவாழ்வுமைய சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.