தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விசுவக்குடி – கல்லாறு நீர்த்தேக்கத்தை திறந்து வைத்து, ஆலத்தூர் வட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.124.2 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைவட்டம் விசுவகுடியில் ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை இன்று (27.2.2016) திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கல்லாறு ஓடையின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகிய மலைகளை இணைத்து அன்னமங்கலத்தில் புதிய ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கத்தின் மூலம் கல்லாற்று நீர் வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதன் முதலாக நபார்டு வங்கி மூலமாக ரூ.7.23 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேற்கண்ட பணிக்கான திருத்திய மதிப்பீடு ரூ.33.07 கோடிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமானப்பணிகள் முடிவுற்றது.
இந்த அணை மூலம் 40.67 மில்லியன் கன அடி தண்ணீரை 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இதற்காக ஏரியின் நீர்ப்போக்கியை அமைத்திட 11.75 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட்டால் ஆன பலமான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வழிந்தோடிகள் 6.5 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்ப்போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12.30 மீட்டர் உயரத்திற்கும் 665 மீட்டர் நீளத்தில் கரைகள் அமைக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது.
அணையில் வழிந்தோடி செல்லும் உபரி நீரானது கல்லாறு ஓடையின் மூலமாக நேரடியாக வெங்கலம் பெரிய ஏரியில் சேருகிறது. மேலும் ஆற்று மதகு மூலம் வெங்கலம் பெரிய ஏரிக்கு கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும். மேலும் இந்த அணையின் இடது பக்க பாசன வாய்க்கால் 1750 மீ நீளமும் வலது பக்க பாசன வாய்க்கால் 2425 மீ நீளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப் பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
தற்பொழுது பணிகள் நிறைவடையும் நிலையில் வடகிழக்கு பருவ மழையில் முதன்முதலாக 05.10.2015 அன்றிலிருந்து ஏரியில் தண்ணீர் தேங்கிநிற்க துவங்கியது. தொடர்ந்து பெய்த மழையால் படிப்படியாக உரிய விதிமுறைகளோடு தண்ணீர் தேக்கப்பட்டு, 30.12.2015 அன்று 8.5 மீட்டர் உயரத்திற்கு 26.53 மில்லியன் கன அடியாக நீர்மட்டம் இருந்தது.
இந்த ஏரி மூலம் தொண்டமாந்துறை, விசுவக்குடி, அன்னமங்கலம், வேப்பந்தட்டை, வெங்கலம் பகுதி விவசாய பெருமக்கள் பயனடைவார்கள்.
இதேபோல பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமம் அருகில் மருதையாற்றின் குறுக்கே ரூ.124.2 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
மருதையாறு அணை திட்டமானது பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கொட்டரை கிராமம் அருகில் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்படவுள்ளது. இந்த அணையில் 211.58 மில்லியன் கன அடி நீர் தேக்ககுவதற்கு வடிவமைக்கப்பட்டு 4194 ஏக்கர் புன்செய் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற உள்ளது.
இந்த அணையின் நீளம் 2175 மீட்டர் இரண்டு பாசன மதகுகள் அமைக்கப்பட்டு இடதுபுற கால்வாய் 9.91 கி.மீ நீளத்தில் 3188 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும் வலதுபுற கால்வாய் 6.57 கி.மீ நீளத்தில் 1006 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும் பாசன வசதி வழங்குவதால் 4830.38 டன் உணவு உற்பத்தி ஏற்படும்.
இடதுபுற கால்வாய் மூலம் கொட்டரை, ஆதனூர், கூத்தூர், புஐங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களும் வலதுபுற கால்வாய் மூலம் கொட்டரை, ஆதனூர், கூடலூர் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊர்களும் பயனடைவதுடன் புதிய அணையை சுற்றியுள்ள 5 கி.மீ தூரத்திற்கு நிலநீர் ஊற்று மிகுதி அடைவதால் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் மிகவும் பயனுடைய திட்டமாகும்.
இத்திட்டத்திற்கு 893.39 ஏக்கர் பட்டா நிலங்களும், 222.94 ஏக்கர் புறம்போக்கு நிலங்களும் நிலகையகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டடங்களை துவக்கி வைத்த பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், நகர்மன்றத் துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் அணையிலிருந்து வெளிவந்த நீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அரசு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட கலந்து கொண்டனர்.