List of polling stations for public viewing; Objections can be reported to: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய திருநாட்டிற்கான வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய வகையில், சரியான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் தயாரிக்கும் பெரு முயற்சியில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2022 -ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர் (தனி), 148.குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்றி அமைத்தல், பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச்சாவடி மையங்களை பகுப்பது தொடர்பான பணிகள் கடந்த 20.08.2021 முதல் நடைபெற்று வருகிறது.

இதன் இறுதி கட்டமாக 13.09.2021 அன்று வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேற்படி வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளது. மேலும், வாக்குச்சாவடி மையங்களின் மாற்றம் குறித்த வரைவு அறிக்கையினை www.perambalur.nic.in என்ற பெரம்பலூர் மாவட்ட அரசு வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 19.09.2021-க்குள் எழுத்து மூலமாக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்திலோ அல்லது சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ தெரிவிக்கலாம், என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!