M.Ed in Distance Education: Teachers’ Association request Tamilnadu Chief Minister
நாமக்கல் : தொலைதூரக் கல்வியில் எம்.எட், படிப்பை கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராமு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பள்ளிக்கல்வி துறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெருபாலானவர்கள் தங்களது பாடத்தில் முதுநிலைப்பட்டமும், கல்வியியலில் இளங்கலை பட்டமும் பெற்று பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் எம்.எட், எம்.பில் ஆகிய இரண்டு உயர் படிப்புகளை படித்தால் இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் என்று அரசாணை உள்ளது. இதில் எம்.பில், பட்டம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எம்.எட் பட்டப்படிப்போ கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதுபரக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட வில்லை.
எனவே தமிழக அரசு டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் எம்.எட், படிப்பை கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது உரிய கல்வி வல்லுநர்களை ஆலோசித்து, தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வியில் எம்.எட்-க்கு பதிலாக கல்வியியல் பாடத்தில் வேறு இணையான முதுநிலை தொழிற்படிப்போ அல்லது அவரவர் சார்ந்த பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது வேறு இணையான பட்டங்களை பெற்றால் பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.