Measures to be followed on the day of counting of votes: Perambalur Collector Information!

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 02.05.2021 அன்று காலை 8.00 மணிக்கு துவங்க உள்ளது. 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின், ஆணையின்படி அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 4 மேசைகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணும் மேசைகளுக்காக 14 முகவர்களையும், தபால் வாக்குகள் எண்ணப்படும் 4 மேசைகளுக்கு தனியாக 4 முகவர்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு 1 முகவர் என மொத்தம் 19 முகவர்களை நியமித்துக் கொள்ளலாம். முகவர்களை நியமிக்க படிவம் 18ல் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இரட்டை பிரதிகளில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் முழுமையாக கிருமிநாசினியின் மூலமாக வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் சுத்தம் செய்யப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு பணியாளர்களைத் தவிர மற்றும் அவரது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேறு நபர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது நிலவி வரும் கொரோனா 19 தொற்றின் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்கும் எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர் எனச் சான்று பெற்ற பின்னரே முகவர்களாக நியமிக்கப்பட்டதற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

இதற்காக வருகிற 28.04.2021 மற்றும் 29.04.2021 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவருக்கேனும் கோவிட் பாசிட்டிவ் தொற்று இருப்பின் வாக்கு எண்ணிக்கைக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக மாற்று முகவர்கள் தெரிவு செய்து, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளரின் முதன்மை முகவர் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆகியோர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கண்டிப்பாக அணிந்து வரவேண்டும். அவ்வாறு முகக்கவசம் மற்றும் கையுறை அணியாத நபர்கள் கண்டிப்பாக வாக்கும் எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். முகவர்களுக்கு வேட்பாளர்களே அவர்களுக்கு வழங்கவேண்டும். வாக்குப்பதிவு தினத்தன்று அனைத்து முகவர்களும் அன்று காலை 7.00 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 02.05.2021 அன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை புரியும் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் பென்சில், பந்து முனை பேனா, வெள்ளை காகித தாள், 17-சி படிவ நகல், அழி ரப்பர் ஆகியவற்றை மட்டும் எடுத்து வரலாம். மேலும், தங்களுக்கு கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றினை உடன்கொண்டு வரவேண்டும். இதைத் தவிர வேறு பொருட்கள் ஏதும் அனுமதிக்கப்படமாட்டாது.

கண்டிப்பாக செல்போன் மற்றும் கூர்மையான பொருட்கள் ஏதும் எடுத்து வர அனுமதியில்லை. காவல் துறையின் சோதனை முடிக்கப்பட்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் கூடத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட மேசையின் முன் ஆஜராக வேண்டும். ஒதுக்கப்பட்ட மேசையை விட்டு அருகில் உள்ள மேசைக்கு செல்லக்கூடாது.

தபால் வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று காலை 8.00 மணிக்கு துவங்கப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் அதற்கென நியமிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு சென்றுவிடவேண்டும். அவர்கள் வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லை. முகவர்கள் வாக்கு மையத்தை விட்டு வெளியே செல்லும் முன் அடையாள அட்டையை காவல் துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் கூடத்தில் அனைத்து முகவர்களும், தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். உடன் இருக்கும் இதர முகவர்களுடன் தேவையற்றவைகளை பேசக்கூடாது. முகவர்கள் எவரேனும் விதிமுறைகளை மீறி நடந்தால் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வேட்பாளர்களும், முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணி சிறந்த முறையில் நடத்த தேவையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!