Merchants request permission from Municipal Commissioner to allow opening of shops in Perambalur: Permission to open shops from Coming Friday
பெரம்பலூர் மாவட்டத்தில் 753 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 482 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 261 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு அதிகரித்து வரும் வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகரில் கடைவீதி, பூசாரி தெரு, பள்ளிவாசல் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, 100 அடி ரோடு உட்பட பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூட நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரும் 14, 16, 21, 23, 24, 28, 30, 31 ஆகிய தேதிகள் முகூர்த்த தேதிகள் என்பதால், பெருமளவில் தங்களது வர்த்தகம் பாதிக்கும் என்றும், எனவே நாளை முதல் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் குமரி மன்னனை நேரில் சந்தித்து பெரம்பலூர் நகர வர்த்தக சங்கத்தினர் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் அரசு வழிகாட்டுதலின்படி வரும் வெள்ளிக்கிழமை முதல் கடைகளைத் திறந்து கொள்ள அனுமதி வழங்கினார்.
மேலும், அரசின் வழிகாட்டுதலின் படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படும் கடைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்த நகராட்சி ஆணையர், பெரம்பலூர் நகர வணிகர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பொது மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, தங்களது வணிகத்தைத் மேற்கொள்ள வேண்டுமெனவும், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.