Minister Saroja ordered the authorities to continue drinking water supply for the public, In the summer
கோடை காலத்தின் தாக்கத்தால் பொதுமக்களுக்குத் தேவைப்படும் குடிநீரைத் தடையின்றி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரோஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ராசிபுரம் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் எம்எல்ஏஅலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி சுந்தரம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் ராசிபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், பொது நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார். வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தற்போது ராசிபுரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. கோடை காலத்தின் தாக்கத்தால் பொதுமக்களுக்குத் தேவைப்படும் குடிநீரைத் தடையின்றி தொடர்ந்து வழங்க அனைத்துப் பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை அலுவலர்களிடம் வழங்கி அந்த மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்டங்களை வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார்.