New Building for Unani Primary Health Care Center to Labbaikudikadu: Kunnam MLA RTR
பெரம்பலூர் அருகே லப்பைக்குடிக்காட்டில் நடந்த குருதி கொடை முகாமை தொடங்கி வைத்த, குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் யுனானி பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
லப்பைக்குடிக்காட்டில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ அணியும் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாமையும் நடத்தினர்.
இந்த முகாமை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி முன்னிலை வகித்தார்.
வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சேசு அனைவரையும் வரவேற்றார். வடக்கலூர், லப்பைக்குடிக்காடு, திருமாந்துறை, பெண்ணக்கோணம் கிராமத்திற்குட்பட்ட மக்கள் இரத்த தானம் செய்தனர்.
மருத்துவர்கள் கண்ணன், மணிவண்ணன் தலைமையிலான மருத்துவகுழு குருதி கொடையாளர்களிடம் சுமார், 101 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டது.
யுனானி மருந்தாளுநர் சாதத்துல்லா இரத்த தானம் செய்தவர்களுக்கு பழம், பிஸ்கட் வழங்கினார். மேலும் சுமார் 200 நபர்களுக்கு ரத்தவகை கண்டறியும் சோதனை செய்யப்பட்டு அதற்கான சான்று தரப்பட்டது. முகாமில் மாவட்ட செயலாளர் ஹக்கிம் பாசா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது, சபீர் அகமது, முனிப் ரக்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் போலியோ சொட்டு மருந்து முகாமை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் யுனானி பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட உரிய ஏற்பாடு செய்வதாக கூறினார்.