New classrooms at Perambalur and Vepur colleges at a cost of Rs. 6.94 crore; Chief Minister M.K. Stalin inaugurated them through video conference!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை நடந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறைகள் மற்றும் வேப்பூர் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ரூபாய் 2.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு புதிய வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் , கலெக்டர் கிரேஸ் பச்சாவ் குத்து விளக்கேற்றி இனிப்புகளை வழங்கினர்.
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் 14 வகுப்பறை கட்டிடத்தில் 1459.71 ச.மீ பரப்பளவில் தரைத்தளம் முதல் தளம், இரண்டாம் தளம், போர்டிகோ, ஹெட்ரூம் உள்ளிட்ட அறைகள் கட்டப்பட்டுள்ளது. தரைதளத்தில் 5 வகுப்பறைகளும் 2 மாணவர்கள் கழிவறைகளும், முதல் தளத்தில் 5 வகுப்பறைகளும் 2 மாணவர்கள் கழிவறைகளும், இரண்டாம் தளத்தில் 4 வகுப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.264 லட்சம் மதிப்பீட்டில் 1255 ச.மீ பரப்பளவில் ஆறு ஆய்வக கட்டடங்கள் தரைத்தளம் முதல் தளம் ஹெட்ரூம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 3 ஆய்வகங்களும், ஒரு கழிவறையும், முதல் தளத்தில் 3 ஆய்வகங்களும் ஒரு கழிவறையும் கட்டப்பட்டுள்ளது.
குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா ரமேஷ், பெரம்பலூர் நகராட்சித் துணைத்தலைவர் ஆதவன், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.