Perambalur: Admissions for children aged 2 to 5 at the Children’s Center will begin in June!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு செயல்படும் 490 குழந்தைகள் மையத்தில் சத்துமாவு ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன் பருவக்கல்வி செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இதன் மூலமாக குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஜூன்-2025 ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் இச்சேவையையும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.