கொலை வழக்கில் ஜாமீன் கேட்டவருக்காக நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து பினைய சாட்சி சொல்ல வந்தவர் கைது
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டவருக்காக நடைபெற்ற சாட்சி விசாரணையின் போது ஆள் மாறாட்டம் செய்து பினைய சாட்சி சொல்ல சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மதுரகாளியம்மன் கடந்த 2007ம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்கிற திருமூர்த்தி என்கிற மூக்கன் சரிவர வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 03.06.15ந்தேதி மூக்கனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மூக்கன் ஜாமீன் கேட்டு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீதான விசாரணையில் புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சின்னபொன்னு(55) பினைய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட வழக்கில் சாட்சி விசாரணை பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன் விசாரணைக்கு வந்தது. சாட்சி விசாரணைக்காக சின்னபொன்னுவின் கணவர் ராஜேந்திரன் சென்றுள்ளார்.
சாட்சியை விசாரித்த நீதிபதி நீங்கள் தான் சின்னபொன்னா என்று கேட்டதற்கு ஆமாம் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நீதிபதி தொடர் விசாரணை மேற்கொண்டார். இதில் ராஜேந்திரன் தனது மனைவி சின்னபொன்னுவிற்கு பதிலாக ஆள்மாறட்டம் செய்து விசாரணைக்கு ஆஜரானது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நீதிபதியின் பரிந்துரையின் பேரில் நீதிமன்ற கிளார்க் கண்ணன் என்பவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் மீது ஆள்மாறட்டம் குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாட்சி விசாரணையின் போது ஆள் மாறாட்டம் செய்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.