Perambalur: Collector Sharanya conducts surprise inspection of district stone quarries; orders installation of weighbridges within the quarry premises.

பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட கல்பாடி, எளம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நாரணமங்கலம், இரூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 5 கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷரண்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, குவாரிகளின் தற்போதைய செயல்பாட்டு நிலை, அனுமதிக்கப்பட்ட அளவிலான உற்பத்தித் திறன், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள அனைத்துச் சட்ட மற்றும் விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும், கல்குவாரிகளில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ன் பிரிவு 36A-ன் கீழ் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறி கனிமங்களை வெட்டியெடுத்தல் மற்றும் கடத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களும், அனுமதிக்கப்பட்ட சர்வே எண்களில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை, இணையவழியில் வழங்கப்படும் டிஸ்பேட்ச் ஸ்லிப், செக்யூரிட்டி பேப்பர் அச்சிடப்பட்ட டிரான்ஸ்சிஸ்ட் பாஸ் உடன் மட்டுமே போக்குவரத்து செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும், எடுத்துச் செல்லப்படும் கனிமத்தின் சரியான அளவிற்கு ஏற்ப வழங்கப்பட்ட செல்லுபடியாகும் டிஸ்பேட்ச் ஸ்லிப், டிரான்ஸ்சிஸ்ட் பாஸ் கட்டாயமாக இருப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்களைக் கொண்டு செல்லாமல் இருப்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி கனிமங்களைக் கொண்டு செல்வது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமங்களை எடுத்துச் செல்வது அல்லது குத்தகை வழங்கப்பட்ட எல்லைக்கு வெளியே சட்டவிரோதமாக குவாரி பணி மேற்கொள்வது போன்ற எந்தவொரு விதிமீறலும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மட்டுமின்றி, கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், குவாரிகளில் இருந்து வெளியேறும் கனிமங்களின் எடையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில், அனைத்து குவாரி உரிமையாளர்களும் தங்களது குவாரி வளாகத்திலேயே எடை மேடை (Weigh Bridge) கட்டாயமாக அமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்றும், குவாரிக்கும் கிரஷருக்கும் இடையேயான சரியான தொலைவைக் கொண்ட அனுமதிச் சீட்டினைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு குவாரி செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், சட்டவிரோத கனிம வெட்டியெடுத்தல் மற்றும் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ஓ அனிதா, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் வட்டாட்சியர்கள் பழனிச்செல்வன், ஆலத்தூர் பாக்கியராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497