Perambalur: Collector, SP inspect areas where accidents occur most on the Trichy-Chennai Highway!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி – சென்னை, (சென்னை – திருச்சி) தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ், போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாதந்தோறும் கலெக்டர் தலைமையில், சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் விபத்துகளை முற்றிலும் குறைப்பதற்கு தேவையான திட்டப் பணிகளான நில எடுப்பு, உயர் அழுத்த மின் கோபுரங்களை மாற்றி அமைப்பது மற்றும் வனத்துறையின் அனுமதி பெறுவது மற்றும் இதர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களான திருச்சி – சென்னை, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 ரோடு பகுதி மேம்பாலம் ஆரம்பமாகும் பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவும், சாலையினை அகலப்படுத்திடவும் கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, செங்குணம் பிரிவு சாலை, எளம்பலூர் ரோவர் கல்லூரி அருகிலுள்ள இணைப்பு சாலை, வல்லாபுரம் இணைப்பு சாலை பகுதி, மங்களமேடு காவல் நிலைய இணைப்பு சாலை, எறையூர் சர்க்கரை ஆலை இணைப்பு சாலை பகுதி, திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள இணைப்பு சாலை, கல்பாடி பிரிவு இணைப்பு சாலை, சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பிரிவு இணைப்பு சாலை, விஜயகோபாலபுரம் பிரிவு சாலை, காரை பிரிவு சாலை, இரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், திருவளக்குறிச்சி இணைப்பு சாலை ஆகிய இடங்களில் விபத்தை தவிர்ப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் அணுகு சாலைகளில் வேகத்தடை அமைப்பது,
சாலையில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்றுதல், புதிய அணுகுசாலை மற்றும் சாலை அகலப்படுத்துதல், விபத்து எச்சரிக்கைக்காக சாலை ஒளிர்மின் விளக்குகள் அமைப்பது, கூடுதலாக புதிய உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும், உத்திரவிட்டார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி செயல்படக்கூடிய கடைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்துறையினர் கண்டறிந்து, முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கவும், பாடாலூர் உயர்மட்ட பால பணிகளை விரைந்து முடித்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ, ஹைவே டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன் மற்றும் தாசில்தார்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.