Perambalur: Crop insurance for Rabi season small onions; Collector information!
பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ராபி சிறப்பு பருவத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காய பயிருக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களை நிலைபெற செய்யவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராபி சிறப்பு பருவ சின்ன வெங்காய பயிருக்கு வருகிற நவம்பர் 30-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துக்கொள்ளலாம். எனவே அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டு தொகையை பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. சின்ன வெங்காய பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.2060/-ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் வெங்காய பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூர் மற்றும் குரும்பலூர் பிர்காக்களில் அடங்கியுள்ள கிராமங்களில் வெங்காய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, சிட்டா, நடப்பு பருவ அடங்கல், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்தவற்கு உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.