Perambalur: Due to the case investigation, the chariot procession that was to take place today has been stopped; Road blockade! Shops closed!! Police deployed!!

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேத மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது என முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழாவும், 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.

இந்நிலையில் மற்றொரு தரப்பினர் தங்கள் வசிக்கும் பகுதிக்கும் தேர் வலம் வர வேண்டும் எனவும், இல்லை என்றால் தேரை இழுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சப் கலெக்டர் கோகுல் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, அப்போது வழக்கமாக தேர் ஓடும் வீதிகளில் மட்டும் தேரை இழுத்துச் செல்ல வேண்டும் எனவும், பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் தேரை இழுப்பது என்றும் முடிவு செய்தனர். அதன் பிறகு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இன்று தேர் உலா வருவதற்கான தேரின் மேற்கூரைகள் அமைத்து தேர்ச்சீலைகள் கட்டும் பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று காலை போலீசார் வந்து ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், இன்று மதியம் தீர்ப்பு வந்துவிடும் அதுவரை தேரை யாரும் இழுக்க கூடாது எனக் கூறி தடுப்புகள் அமைத்து தேரை நகர்த்த முடியாத வகையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினர். வியாபாரிகளும் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் அதிவிரைவு படை போலீசார் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.இதனால், தேரோட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து மாலை 3 மணி அளவில் சென்னை ஐகோர்ட்டில் இருந்து தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும், தேரை யாரும் இழுக்கக் கூடாது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் போக்குவரத்தை அன்னமங்கலம் வழியாக மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் வேப்பந்தட்டைக்கு எந்த வாகனமும் வரவில்லை. இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6:30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். தேர் திருவிழாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறாமல் தடைபட்டது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், சென்னை உயர்நீதிமன்றம், பெரம்பலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு ஓர் உத்தரவுவிட்டுள்ளதாகவும், அதில், அந்த குறிப்பிட்ட தெருக்களில் தேர் வலம் வர வாய்ப்பு உள்ளதா? என ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சசம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!