Perambalur: Farmers request the government to provide relief for maize damaged by heavy rains!
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மானாவரி மற்றும் இரவையாக ஒரு லட்சத்து 65ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளத்தை பயிரிடப்பட்டுள்ளனர். கடந்த ஆடி மாதம் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் வறட்சியின் காரணமாக ஒரு அடி உயரத்திற்கு மேல் வளராமல் காய்ந்து போனதால், பெரும்பாலான விவசாயிகள் அதனை வயலில் வைத்து அப்படியே உழவு செய்துவிட்டு மீண்டும் மக்காச்சோளத்தை பயிரிட்டனர். இந்த மக்காச்சோள பயிர்கள் வளர்ந்து கருதுவிட்டு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த வாரம் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் காற்றில் பல்வேறு இடங்களில் மக்காச்சோளப் பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கி நின்றதோடு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் குன்னம் தாலுகா பகுதிகளில் விளைவிக்கப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் வயலில் சாய்ந்து போனது. இவ்வாறு சாய்ந்து போன பயிர்களில் உள்ள மக்காச்சோளம் தற்பொழுது வயலில் மழைநீர் தேங்கி நின்றதால் முளைத்து வருகிறது. இவ்வாறு மக்காச்சோள பயிர்கள் முளைவிட்டு போனதால் அதனை விற்பனை செய்ய கூட முடியாது என்று கூறும் விவசாயிகள், நல்ல நிலையில் உள்ள மக்காச்சோளத்தையே வியாபாரிகள் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய்க்கு கூட வாங்க மறுக்கிறார்கள் எனவும் இந்நிலையில் முளைத்து போன மக்காச்சோளத்தை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் முளைத்துப் போன மக்காசோளத்தை வயலில் வைத்து, அப்படியே தட்டையுடன் உழவு செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதற்காக உழவு செய்த செலவு விதை, கலை பறித்த கூலி, மருந்து என பல்வேறு விதங்களில் ஒரு ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், வங்கியில் கடன் வாங்கி செலவு செய்துள்ள தங்களுக்கு இதனை ஈடு செய்ய,அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கா விட்டால் விவசாயம் செய்வதை தவிர்த்து விட்டு வேறு தொழிலுக்கு செல்வதை தவிர வேறு வழி இல்லை என்று வருத்தத்துடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி விரைவாகவும், முறையாகவும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்காச்சோள விவசாயிகளின் குரலாக உள்ளது.