Perambalur: Free eye treatment camp in Kolakanatam on behalf of Alathur Union DMK!
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மற்றும் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அனைத்து கண் நோய்களுக்கும் சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கண் ஆபரேசனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அன்றே மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடு செய்தனர்.
முகாமில் மதுரை தனியார் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கொளக்காநத்தம், அயினாபுரம், காரை, தெரணி, புதுக்குறிச்சி, அணைப்பாடி, கொளத்தூர், இலுப்பைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அறுவை சிகிச்சை தேவைப்படும் 74 நபர்களை வாகனம் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இம்முகாமில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், மாவட்ட அமைப்பாளர்கள் சுந்தரராசு, குமார், அன்புச்செல்வன், பாலமுருகன், இளவரசு, ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி, புகழேந்தி, எழில்ராஜ், பிரபு உள்ளிட்ட திமுக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.