எங்கள் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் – தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் சு.ஆடுதுறையை சார்ந்த வாக்காளர்கள் உறுதிமொழி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணைத்தின் உத்தரவின் பேரில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குன்னம் வட்டத்திற்குடப்பட்ட சு.ஆடுதுறை பகுதியில் இந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது வாக்கு சதவீதத்தை உயரத்திடும் நோக்கில் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் சு.ஆடுதுறையை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்ற வாக்காளர் வழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் “நம்மை நாமே ஆளுகின்ற ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் அனைவரின் உரிமையும், கடமையுமாகும். சட்டத்திற்கு உட்பட்டு சாதி, மதம், இனம், மற்றும் மொழி வேறுபாடுகளை களைந்து நேர்மையுடன் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம்” என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாகச்சென்றனர்.
அதற்கு முன்பாக சு.ஆடுதுறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் நபர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துக்கூறி எங்கள் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற இந்த தருணத்தில் உறுதியேற்கிறோம், என தேர்தல் உறுதி மொழி ஏற்றனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் குன்னம் வட்டாட்சியர் ஷாஜஹான் மற்றும் வருவாய் துறை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.