Perambalur: Gang escapes after trying to rob jewellery shop; Special police force chases and catches them in Tindivanam!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூரை சேர்ந்தவர் தமிழரசன் (67). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி அதிகாலை முக மூடி அணிந்து காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், நகை கடை காவலாளி ஜெயராமனை கை, கால்களை கட்டி, வாயில் டேப்பை ஒட்டி கடையின் பின்புறம் தூக்கி வீசினர். பின்னர் காஸ் கட்டரை கொண்டு நகை கடையின் முன்புறம் இருந்த பூட்டை உடைக்க முயன்றனர்.

அப்போது நகைக்கடையில் இருந்த எச்சரிக்கை அலாரம் மூலம், தமிழரசனின் செல்போனுக்கு தகவல் சென்றது. அதை பார்த்து விழித்து கொண்ட தமிழரசன் உடனே கடைக்கு ஓடி வந்து பார்த்தார். அப்போது முகமூடி அணிந்த 3 பேரும் காஸ் கட்டர் மூலம் கடையின் பூட்டை உடைத்து கொண்டிருந் தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தமிட்டதும், மர்ம நபர்கள் கையில் இருந்த பொருட்களை அங்கேயே போட்டு விட்டு காரில் தப்பி விட்டனர். இதுகுறித்து தமிழரசன் பாடாலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் கொள்ளையடிக்கும் நோக்கில் 4 பேர் காரில் வந்தனர். அதில் ஒருவர் ஓட்டுனர். மற்ற 3 பேரும் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் ஆடை கூட அடையாளம் தெரியாத வகையில், முழுமையாக கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தனர். நகைக்கடையில் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் இந்த கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. நகைகளும் தப்பின. நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல்கள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்ததில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கொள்ளைக் கும்பல் உலாவி வந்ததை அடுத்து அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பித்து ஓடினர். சினிமா பாணியில் தனிப்படை போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

பின்னர், உள்ளூர் போலீசார் உதவியுடன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன் (34) என்பவரிடம் நடத்திய விசாரனைணயில் பாடாலூர் பகுதியில் கொள்ளையடிக்க முயன்றதும், அவனது கூட்டாளிகளான 5 பேரையும் போலீசார் 5 பேரை பிடித்து வந்தனர். பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளை கும்பல் பெரம்பலூர் உள்பட தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கைவரிசையை காட்டி உள்ளது என்றும், அவர்கள் இதற்கு முன்பு ஈடுபட்ட குற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாடாலூர் நகைக்கடையில் கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பாடாலூர் நகைக்கடை கொள்ளைக்கு திட்டம் போட்டது எப்படி? முக்கிய மூளையாக செயல்பட்டது யார்? என பல்வேறு கோணங்களில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!