Perambalur: Gram Sabha meeting at Nochiyam – Cooperation needed to protect water bodies; Collector speaks!

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் ஷரண்யா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கிராமப்புற பண்ணை மற்றும் பண்ணை சாராத வாழ்வாதார நடவடிக்கைகள், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சியின் வரவு செலவு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் நடைபெற்றுவரும் இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னர், கலெக்டர் ஷரண்யா பேசியதாவது: குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி வழங்குவதற்காக அரசின் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, பெண் குழந்தைகளுக்கு இளம் வயது திருமணத்தை தவிர்த்து, அவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கல்வி கற்க வைக்க வேண்டும், நமது மாவட்டத்தில், குளங்கள், நீர்த்தேக்கம் போன்ற நீர்நிலைகளை மழைக்காலம் வருவதால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே,பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும், தற்போது நமது மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுக்கவரும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேசினார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் தகவலை சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) ராஜேந்திரன், தாசில்தார் பழனிச்செல்வன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497