Perambalur: Gram Sabha meeting on the occasion of Republic Day; Collector’s information!
பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல்,
இதர பொருட்கள் குறித்தும் கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்,
குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும், அனைத்துத் துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும், கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினமான 26.01.2025 அன்று கிராம சபைக் கூட்டத்தில் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.