Perambalur: Kalaingar Dream home project; Permission to build 2400 houses in 2 years! District administration information!!

தமிழ்நாடு முதலமைச்சர் குடிசைகள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் வீடில்லாத நபர்கள், குடிசை வீடுகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டமாக ”கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.

2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் வீடில்லாத மற்றும் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற அடிப்படையில் பயனாளிகள் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

அதனடிப்படையில், குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாத ஏழை,எளிய மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக 360 சதுர அடி பரப்பளவில், சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகின்றது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கு 1,200 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு, அதில் 599 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 601 வீடுகளின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. விரைவில் அனைத்து வீடுகளின் பணிகளும் முடிக்கப்படும்.

இதேபோல, 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கு 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் 1,200 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆக மொத்தம் கடந்த 2 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 2,400 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்ட தலா ரூ.3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!