Perambalur: Landslide at a stone quarry; workers miraculously escape unharmed!!

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் இருந்து நெடுவாசல் செல்லும் சாலையில், கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட எல்லைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்ற இந்த கல்குவாரிகளில் நாள்தோறும் ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 யூனிட் சோலிங் முதல் 1500 யூனிட் சோலிங் கற்கள் வரை பிரித்தெடுக்கப்பட்டு லாரிகள் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள கிரசர்களுக்கு ஏற்றிச் செல்லப்படுகிறது. இதற்காக இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் ஏராளமான நவீன இயந்திரங்களும், தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை கல்பாடி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஒரு கல் குவாரியில், பாறைகள் மீது படிந்து இருந்த மண் குவியலை ஹிட்டாச்சி வாகன மூலம் அகற்றி டிப்பர் லாரியில் ஏற்றும் பணியில் 10க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதனிடையே குவாரியின் கீழ் பகுதியில் பாறைகளின் மீது படிந்திருந்த மண் குவியலை ஹிட்டாச்சி வாகனம் மூலம் அகற்றிய போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கல்குவாரியின் மேல் பகுதியில் இருந்த மண்ணுயும், பாறை கற்களும் திடீரென கீழே சரிந்து ஹிட்டாச்சி வாகனத்தின் மீதும், டிப்பர் லாரியின் மீதும் விழுந்துள்ளது. இதனை அறிந்த கல்குவாரி தொழிலாளர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மண் சரிவின் இடிபாடுகளுக்கிடையே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு ஹிட்டாச்சி வாகனமும், 25 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டிப்பர் லாரியும் சிக்கி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேரா மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கல்குவாரியில் மண் சரிந்து விழுந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஹிட்டாச்சி வாகனத்தின் டிரைவரான திருப்பத்தூரை சேர்ந்த சிவா(28) என்பவரிடம் மருவத்தூர் இன்ஸ்பெக்டர் கயல்விழி விபத்து எப்படி நடந்தது? என விசாரணை நடத்தி வருகிறார். கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் கவுல்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்த அய்யந்துரை(49), என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.










kaalaimalar2@gmail.com |
9003770497