Perambalur: Municipal RI arrested for accepting Rs. 25 thousand bribe to issue receipt for new house!

பெரம்பலூர் நகராட்சியில் கட்டப்பட்ட புதிய வீட்டுக்கு வரி ரசீது வழங்க ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பெரம்பலூர் நகராட்சி சங்குபேட்டை பகுதியைச் சேர்ந்த மெய்யன். இவர் தனது உறவினர் மகேஸ்வரி என்பவர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாடி சாலையில் உள்ள அன்பு நகரில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு புதிய வீட்டு வரி ரசீது வழங்க வேண்டி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து மெய்யனை தொடர்பு கொண்ட 15 ஆவது வார்டு நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் என்பவர் புதிதாக ரசீது போடுவதற்கு 25,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பணத்தை கொடுக்க விரும்பாத மெய்யன் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ஆலோசனைபடி மெய்யன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை தொடர்பு கொண்டு லஞ்சப் பணத்தை தனது வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு வந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன், மெய்யனிடம் லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாயை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக வருவாய் ஆய்வாளர் கண்ணனை கைது செய்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சப் பணத்தை வாங்குவதற்காக எந்தவித அச்சமும் இன்றி வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கியபோது, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!