Perambalur: National Deworming Day; Collector inaugurated by distributing pills!
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் நிகழ்வு கலெக்டர் கிரேஸ், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும் 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடல் புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது. 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகின்றது.
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும், வீடுவீடாகச் சென்று குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் குடற்புழுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றது. தேசிய குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,73,916 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 45,034 பெண்கள் பயன்பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று முதல் கட்டமாகவும், விடுபட்ட குழந்தைகளுக்கும் 17.2.2025 அன்று இரண்டாம் கட்ட முகாம் நடைபெற உள்ளது.
சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.