Perambalur: New Government Arts & Science College to be inaugurated in Kolakanatam; Chief Minister to inaugurate it! Collector inspects!!

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகளை தொடங்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தத்தில் புதிய கல்லூரி  அமையவுள்ளது.  இக்கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 26.5.2025 அன்று காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். கொளக்காநத்தத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இக்கல்லூரியில் வணிகவியல், உயர் தொழில்நுட்பவியல், பொருளியல், அரசியல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் என 5  பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்ப பாடப்பிரிவுகளில் 250 மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும், இப் பாடப்பிரிவில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில்வதற்கான சேர்க்கை குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டதில் இதுவரை 300 மாணவர்கள் இணையதளம் வாயிலாக கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களுக்காக தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பறைகள், அவர்கள் அமர்வதற்கு போடப்பட்டுள்ள இருக்கைகளின் தரம், இருபாலருக்கான கழிவறை வசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டார்.  

முன்னதாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து கொளக்காநத்தம் ஊராட்சியில் புலத் தணிக்கை ஆய்வினை மேற்கொண்ட கலெக்டர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தினை பார்வையிட்டு போதிய இடத்தினை கல்லூரிக்கு  வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலத்தூர் வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது முன்னாள் யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!