பெரம்பலுாரில் உயரதிகாரியின் டார்ச்சரால் பெரம்பலுார் கலெக்டர் அலுவலக ஆர்.ஐ., ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலுார் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் பாலகிருஷ்ணன் (வயது 36), வருவாய் அலுவலரான இவர் பெரம்பலுார் கலெக்டர் அலுவலக ‘பி’ பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இதய அறுவை சிகிச்சை செய்துள்ள இவர் அடிக்கடி அலுவலகத்துக்கு விடுப்பு எடுப்பதும், காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் இவர் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம் என தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி அலுவலகத்துக்கு வந்த இவரை உயரதிகாரி ஒருவர் (டி.ஆர்.ஓ., மீனாட்சி) திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இவர் 24ம் தேதி இரவு விஷம் குடித்தார். இரவு 11 மணியளவில் வீட்டில் வாந்தி எடுத்ததை பார்த்த, இவரது மனைவி மகாலட்சுமி,27, இது குறித்து கேட்டபோது பூச்சி மருந்து குடித்துவிட்டதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பெரம்பலுார் அரசு மருத்துவமனையிலும், பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து பாலகிருஷ்ணனின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மங்கலமேடு எஸ்.எஸ்.ஐ., பாலசுந்தரம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
பாலகிருஷ்ணன் மனைவி கொடுத்துள்ள புகாரில் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.