Perambalur: Sand truck-car collision near Mangalamedu; Wife dead – husband seriously injured!
பெரம்பலூர்: மங்கலமேடு அருகே மணல் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கரம்பக்குடியை சேர்ந்தவர் கிங்ஸ்லி சகாயராஜ் (வயது 38). இவர் சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இவரும் இவரது மனைவி அனுசுயா (வயது 28) இருவரும் ஒரு காரில் சென்னையிலிருந்து சொந்த ஊரான கரம்பக்குடிக்கு சென்று விட்டு பின்னர் சென்னை நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
காரை கிங்ஸ்லி சகாயராஜ் ஓட்டி வந்தார். கார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள முருக்கன்குடி பிரிவு பாதை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி மணல் ஏற்றி கொண்டு முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. அப்போது லாரியின் பின்புறம் கார் சிக்கி நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே அனுசுயா பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த நிலையிலிருந்த கிங்ஸ்லி சகாயராஜை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார்வழக்கு பதிவு செய்து மணல் லாரி டிரைவர் சென்னையை சேர்ந்த சேகர் (52) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.