Perambalur: SIR; The Collector released the draft electoral roll; 49,548 names removed!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ந.மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.

1,200 வாக்காளர்களுக்கு மிகாத வாக்குச்சாவடிகள், குடியிருக்கும் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள், மற்றும் பழுதான வாக்குச்சாவடிகள் ஆகிய காரணங்களுக்காக 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 332 வாக்குச்சாவடிகளும், 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 320 வாக்குச்சாவடிகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டு 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 55 புதிய வாக்குச்சாவடிகளும் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 25 புதிய வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,80,566 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,36,304 ஆண் வாக்காளர்களும் 1,44,235 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதில் இறந்துபோன வாக்காளர்கள் 12,965 பேர், இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் 4,340 பேர், நிரந்தரமாக வெளியேறிவர்கள் 10,329 பேர், இரட்டைப் பதிவுள்ள வாக்காளர்கள் 1725 பேர், இதரர் 17 பேர் என மொத்தம் 29,376 வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர்.

148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,60,376 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,28,817 ஆண் வாக்காளர்களும் 1,31,556 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இறந்துபோன வாக்காளர்கள் 9,995 பேர், இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் 636 பேர், நிரந்தரமாக வெளியேறிவர்கள் 7,732பேர், இரட்டைப்பதிவுள்ள வாக்காளர்கள் 1801 பேர், இதரர் 8 பேர் என மொத்தம் 20,172 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் இரண்டு தொகுதிகளையும் சேர்த்து இறந்துபோன வாக்காளர்கள் 22,960 பேர், இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் 4,976 பேர், நிரந்தரமாக வெளியேறிவர்கள் 18,061 பேர், இரட்டைப்பதிவுள்ள வாக்காளர்கள் 3526 பேர், இதரர் 25 பேர் என மொத்தம் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கணக்கீட்டு படிவம் திரும்பப் பெறும் இறுதி நாளான 19.12.2025 வரை கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப வழங்காமல் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையும் வாக்குச்சாவடிகள் வாரியாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர் (BLA-2) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கள விசாரணை அடிப்படையில் கீழ்கண்ட வகைப்பாட்டில் அதாவது இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் (Absentee) / நிரந்தரமாக இடம்பெயர்ந்த (Shifted) / இறந்துபோன வாக்காளர்கள் (Death) / இரட்டை பதிவாக (Double Entry) உள்ள வாக்காளர்கள் மற்றும் இதர (Others) வாக்காளர்கள் ASDD என்றவாறு அரசியல் கட்சியினரின் ஒப்புதல் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள 49,548 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

நீக்கத்திற்கு முன்பு பெரம்பலூர் தொகுதியில் 3,09,942 வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 2,80,548 வாக்காளர்களும் என மொத்தம் 5,90,490 வாக்காளர்கள் இருந்தனர். நீக்கத்திற்கு பிறகு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2,80,566 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,60,376 வாக்காளர்களும் உள்ளனர். ஆகமொத்தம், இரண்டு தொகுதிகளையும் சேர்த்து, 2,65,121 ஆண் வாக்காளர்களும், 2,75,791 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 5,40,942 வாக்காளர்கள் தற்போது உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலகங்களில், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் மற்றும் வாக்குசாவடிகளில் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலரின் perambalur.nic.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாகவும் ASDD வாக்காளர்களின் விவரங்கள் தொடர்பாகவும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆட்சேபணையை 19.12.2025 முதல் 18.01.2026-க்குள் வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, பெரம்பலூர், வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 148 குன்னம் சட்டமன்ற தொகுதி, பெரம்பலூர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 19.12.2025 முதல் 10.02.2026 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட தேர்தல் துறையை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!