Perambalur: Social justice hostel for Kolakanatham Government College students; Minister Sivashankar, Meiyanathan inaugurated!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சமூகநீதி விடுதிகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் கொளக்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், முன்னாள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்ததாவது: அரசுப் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், உயர்வுக்கு படி என மாணவர்களின் பள்ளிக் கல்விக்கும், உயர்கல்விக்கும் எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் தங்களது கல்வியினை சிரமமின்றி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி நிலையங்களுக்கு அருகில் இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டம், டாம்கோ திட்டம்,இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்,முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்,பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 26 சமூக நீதி பள்ளி விடுதிகள் மற்றும் 10 சமூக நீதி கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறது இவ்விடுதிகளில் நடப்பாண்டில் 945 பள்ளி/கல்லூரி மாணவர்கள் மற்றும் 1582 பள்ளி/கல்லூரி மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் இன்று கொளக்காநத்தத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் மக்களுக்கு நலன் பயக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டம். குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் மேல்நிலைக் கல்வி முடித்துவிட்டு கல்லூரி பயல திருச்சி, பெரம்பலூர், அரியலூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் சூழல் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கும்போது உடனடியாக இந்த பகுதிக்கு ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அறிவித்து தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.1 கோடி வழங்கி, கல்லூரிக்கான கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது கல்லூரிக்கான கட்டடங்களை முழுவதுமாக கட்டி முடிக்க ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி, எதிர்வரும் 16.2.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரி கட்டடம் கட்டும் பணிகளுக்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.
இன்று அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 அனைவரின் வங்கிக்கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான தொகையாக ரூ.3,000ம், கோடைகால செலவினத் தொகையாக ரூ.2,000ம் என மொத்தம் 5,000 வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை காரணம் காட்டி மகளிருக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை நிறுத்துவதற்கு சிலர் செய்த சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் அதிரடி முடிவெடுத்து அனைத்து மகளிருக்கும் இன்ப அதிர்ச்சி வழங்கி உள்ளார். மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்றுவதற்காகவும் திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும், என பேசினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.31,200 மதிப்பில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர். அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தகண்ணதாசன் மற்றும் முன்னாள் கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன், திமுக இளைஞரணி அமைப்பாளர் வ.சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497