Perambalur: Sri Chandi Maha Yagham for the benefit of the world on the occasion of Chithirai Pournami at Siruvachur Sri Madhurakaliamman Temple!
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற ஸ்ரீமதுரகாளிஅம்மன் கோவிலில் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 16-வது சித்திரை பவுர்ணமி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் அகண்ட ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஸ்ரீசாகம்பரி குங்கும அர்ச்சனையுடன் கூட்டு வழிபாடும், மாலையில் நவாவரண பூஜையும் நடந்தது. ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம-ஸ்ரீசாகம்பரி குங்கும அர்ச்சனை மற்றும் ஸ்ரீசண்டி மஞ்சரி மகாஹோமத்தை ஸ்ரீபரிபூர்ணாம்பா சமேத ஸ்ரீமதுராம்பிகாநந்த ப்ரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
சித்திரை பவுர்ணமி தினமான இன்று உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி காலையில் ஸ்ரீசண்டி பாராயணமும், ஸ்ரீசண்டி மஞ்சரி மகா யாகமும் யாகசாலை முன்பு கும்பகலசங்கள் வைக்கப்பட்டு, கும்பபூஜைகளும் நடைபெற்றது, இதனைத்தொடர்ந்து. பகலில் மதுரகாளி அம்மனுக்கு அபிசேகங்களும், மகாதீபஆராதனையும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்களான மகாமேரு மண்;டலியின் ஆன்மீக மெய்யன்பர்கள் மற்றும் பக்தர்கள் குழுவினர் கலந்துகொண்டு கும்பபூஜைகளையும்,; ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தையும் நடத்திவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.