Perambalur: VAO arrested for accepting bribe to add name to patta!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் கலைமணி ( 34) விவசாயி. இவர் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் கூட்டு பட்டாவில் தனது தாயார் பெயரை சேர்க்க கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தினை பரிசிலனை செய்த
பெரியம்மாபாளையம் வி.ஏ.ஓ-வாக பணிபுரியும் துங்கபுரத்தை சேர்ந்த நடேசன் மகன் அன்பழகன் ( 50) கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க 2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார் .
லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத கலைமணி பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார் . லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் பேரில் நேற்று மதியம் 2 மணியளவில் குன்னம் வீஏஓ அலுவலகத்தில் இருந்த பெரியம்மாபாளையம் விஏஓ அன்பழகனிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பணத்தை கலைமணி கொடுத்தார்.
அப்பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் திடீரென விஏஓ அலுவலகத்தில் உள்ளே புகுந்து விஏஓ அன்பழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.