Precautionary measures for Northeast monsoon: Perambalur Collector Discuss with officials!

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் இன்று, கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மேற்கொள்ளப்பட் வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கோட்டம் மற்றும் வட்ட அளவில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அதில் அனைத்துத் துறை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்கள் அடங்கிய கையேட்டினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வருவாய் கோட்டாட்சியர்/வட்டாட்சியர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட மழை மாணிகளை தணிக்கை செய்து அதன் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பேரிடரின் போது காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுகட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் (District Disaster Management Plan) தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்திட வேண்டும். மேலும் பொதுப் பணித்துறை கட்டிடங்களில் நிவராண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை உடனே சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீர்நிலைப் புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகள் பலவீனமாக உள்ளனவா என கண்டறிந்து அவற்றை பலப்படுத்த சம்மந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

வட கிழக்கு பருவமழைக் காலங்களில் ஆறுகள் ஏரிகள் மற்றும் வரத்துக் கால்வாய்களில் கரைகள் உடையும் பட்சத்தில் உடனே அதனை சரிசெய்யவும், சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து ஏற்படும் தடைகளை அகற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும், மற்றும் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட இயந்திரங்களையும் அதனை இயக்கும் நபருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேவையான அளவு மணல் மூட்டைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தக்குழுக்களில் நீச்சல் தெரிந்த நபர்கள், முறிந்துவிழும் மரங்களை அறுப்பதற்கான கருவிகளை இயக்க தெரிந்த நபர்கள், பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்கும் தன்னலமற்ற பணியினை மேற்கொள்ளும் நபர்கள் இடம்பெறுமாறு குழுக்களை அமைக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளி கட்டிடங்கள் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தலைமை இடத்திலேயே கண்டிப்பாக தங்கியிருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எந்தவித இடர்பாடும் ஏற்படாத வண்ணம் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து துரிதமாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம், சப்-கலெக்டர் நிறைமதி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் பாரதிதாசன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!