Rs.4500 crore power project with private investment: Electricity Board should not be privatized; PMK Founder Ramadoss!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.4500 கோடி மதிப்பிலான துணை மின்நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழித்தடத் திட்டத்தை தனியார் முதலீட்டில் செயல்படுத்த மின்சார வாரியம் தீர்மானித்திருக்கிறது. பல துணை மின்நிலையங்களின் பராமரிப்பு ஏற்கனவே தனியாரிடம் விடப்பட்டுள்ள நிலையில், மின்வாரியத்தை படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓர் அங்கமான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 132 ஏக்கர் நிலப்பரப்பில் 765 கிலோ வோல்ட் திறன்கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. அங்கிருந்து அரியலூர் வரை மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை செய்து முடிக்க ரூ.4,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசகரை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆலோசகர் தேர்வு முடிவு செய்யப்பட்டவுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணிகளை விரைவுபடுத்தும்.

தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகளை அமைத்துப் பராமரிக்க வேண்டியது தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் பணியாகும். இதற்காக அந்த அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் 1091 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வாயிலாக 38,771 சுற்றுகி.மீ தொலைவுக்கு மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரு துணை மின்நிலையங்கள் தலா 765 கிலோ வோல்ட் திறன் கொண்டவை. அவற்றின் வாயிலாக மட்டும் 733 சுற்று கி.மீ தொலைவுக்கு மின்பாதைகள் அமைக்கபட்டுள்ளன. இவை அனைத்தும் மின் தொடரமைப்புக் கழகத்தின் வாயிலாக, அதன் சொந்த முதலீட்டில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, தனியார் முதலீட்டில் மேற்கொள்ளப்படவில்லை.

முதன்முறையாக இப்போது தான் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையமும் அதன் மின் பாதைகளும் தனியார் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போதுள்ள நிலையில், இந்த தனியார் மயமாக்கல் திட்டம் அதன் நிதிநிலையையும், லாபமீட்டும் தன்மையையும் மேலும் மோசமாக்குமே தவிர, எந்த வகையிலும் சாதகமாக பயனளிக்காது.

தனியார் முதலீட்டில் 765 கிலோவாட் துணைமின்நிலையமும், மின் பாதைகளும் அமைக்கப்படும் போது, அவற்றின் வாயிலாக கொண்டு செல்லப்படும் மின்சாரத்திற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை தனியார் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும். இந்தத் திட்டத்திற்காக செய்யப்படும் முதலீட்டுடன் ஒப்பிடும் போது, அதற்காக கட்டணமாக செலுத்தப்படும் தொகை கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

வாடகை சோபா 20 ரூபாய், விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபாய் என்பதைப் போலத் தான் இந்தத் திட்டம் அமையும். அதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியிலேயே பல துணை மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ.4500 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையமே அமைக்கப்பட்டால், அது படிப்படியாக மின்சார வாரியம் தனியார்மயமாகவே வழிவகுக்கும்.

தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அவற்றில் முதல் நடவடிக்கை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவது தான்.

கடந்த 20 ஆண்டுகளில் வெறும் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் புதிய மின்திட்டங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிலாக செயல்படுத்தப் பட்டுள்ளன. அதனால், 2022-&23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாயான ரூ.82,400 கோடியில் ரூ.51,000 கோடி வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், மின்சாரத்தை கொண்டு செல்வதற்காகவும் தனியாருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்தை இலாபத்தில் இயக்குவது எப்படி சாத்தியமாகும்? மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு மட்டும் தான் இது வழிவகுக்கும். எனவே, 765 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அந்தத் திட்டத்தை மின்தொடரமைப்புக் கழகமே சொந்த முதலீட்டில் செயல்படுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!