The governor? If you have honesty, investigate the case of higher corruption! PMK Ramadoss Challenge!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

‘‘சட்டத்தின் முன் சாமானியர்கள் பல்டி அடித்ததை இந்த நாடு பார்த்திருக்கிறது. ஆனால், அதிகாரத்தின் முன் ஓர் ஆளுனரே பல்டி அடிப்பதை இப்போது தான் இந்நாடு காண்கிறது’’ என்று குறிப்பிடும் வகையில் தான் உயர்கல்வித்துறை ஊழல்கள் தொடர்பான ஆளுனர் பன்வாரிலாலின் நிலைப்பாடுகள் உள்ளன. ஊழலை ஒழிக்க வந்தவரைப் போன்று இரு நாட்களுக்கு முன் பேசிய ஆளுனர் பன்வாரிலால், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஊழல் காப்பாளர் வேடம் தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையில் கடந்த 6&ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக நான் நேரடியாகக் கூறவில்லை; கல்வியாளர்கள் கூறியதைத் தான் நான் கூறினேன் என்று விளக்கமளித்து இச்சிக்கலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

ஆளுனரிடம் இது எதிர்பார்த்தது தான். கடந்த 6&ஆம் தேதி நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் துணை வேந்தர் நியமன ஊழல் குறித்து விரிவாகப் பேசினார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆளுனர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஆளுனரின் உரைக் குறிப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ஊழல் குறித்த பகுதி நீக்கப்பட்டிருந்தது. யாருக்கு அஞ்சி இது நடந்தது என்பது தெரியவில்லை. இப்போது அதை விட ஒருபடி மேலே போய் யார் மீதும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையோ அல்லது பணப் பரிமாற்ற குற்றச்சாட்டையோ முன்வைக்கவில்லை என்று ஆளுனர் கூறியிருக்கிறார். ஆளுனரிடம் நான் கேட்க விரும்பும் முதல் கேள்வி, ‘‘ துணைவேந்தர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்ததாக உங்களிடம் கல்வியாளர்கள் கூறிய குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா…. இல்லையா?’’ என்பது தான்.

* ஒருவேளை அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆளுனர் நம்பவில்லை என்றால், துணைவேந்தர் நியமனத்தில் அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள்?

* ஆளுனர் மாளிகை வெளியிட்ட விளக்க அறிக்கையின் இறுதியில், முந்தைய ஆளுனர்களால் நியமிக்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஊழலுக்காக கைது செய்யப்பட்டது, மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லமுத்து உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டது, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஆகியவற்றை சுட்டிக் கட்டியுள்ளார். இதன் மூலம் அவர்கள் ஊழல்வாதிகள் என்கிறாரா அல்லது அப்பாவிகள் தவறாக தண்டிக்கப்பட்டனர் என்கிறாரா?

* ஆளுனர் என்பவர் அவரது பார்வைக்கு வரும் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டுகளை கூறிய அது குறித்து விசாரித்து உண்மை நிலையை அறிய வேண்டிய ஆளுனரின் கடமை. அந்தக் கடமையை ஆளுனர் செய்தாரா?

* ஒருவேளை ஆளுனர் விசாரணை நடத்தி அதில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தது உண்மை என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காதது ஏன்? தவறே நடக்கவில்லை என்றால் துணைவேந்தர்கள் நியமனம் மிகவும் நேர்மையாக நடந்தது என்று அறிவிக்காதது ஏன்?

* 2018&ஆம் ஆண்டில் தம்மால் நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர்களும் நேர்மையாக, வெளிப்படையாக, விதிகளைப் பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பன்வாரிலால் புரோகித் கூறுகிறார். ஒப்பீட்டளவில் இந்த துணைவேந்தர்கள் நியமனம் ஓரளவு நியாயமாக நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இப்போது நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களைவிட திறமையான கல்வியாளர்கள் விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டது என்றால் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது முதல் ஆளுனரால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை அனைத்தும் எந்த அடிப்படையில் நடந்தது என்பது குறித்து ஆளுனர் மாளிகை வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

* ஆளுனர் பன்வாரிலால் அவர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் கையூட்டு பெறாதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களில் சிலர் நேர்மையானவர்கள் அல்ல. உதாரணமாக பெரியார் பல்கலைக் கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பணியாற்றும் 15 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் உயர்நீதிமன்ற ஆணைப்படி பணி நிலைப்பு செய்யப்பட்டனர். இதற்காக அவர்களிடமிருந்து துணைவேந்தர் ஒரு பைசா கூட வாங்கவில்லை. ஆனால், துணைவேந்தருக்கு தெரிந்தே 11 பேரிடமிருந்து உயர்கல்வி அமைச்சர் அவரது தரகர்கள் மூலம் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.1.65 கோடி கையூட்டு வசூலித்தனர். கையூட்டு தர மறுத்த 4 பேரையும்,‘‘ நீங்கள் தகுதிகாண் காலத்தை (Probationary Period)’’ நிறைவு செய்ய முடியாது என அமைச்சரின் ஆட்கள் மிரட்டுகின்றனர். இவை அனைத்தையும் தடுக்காமல் துணைவேந்தர் குழந்தைவேலு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்கு மறைமுகமாக துணை போகும் அவர் நேர்மையானவரா?

தமிழக ஆளுனர் பன்வாரிலாலின் தொடக்ககால செயல்பாடுகள் அவர் நேர்மைப் பயிருக்கு காவலாக இருப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால், இப்போதோ அவர் ஊழல் களைக்கு காவலரோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்தப் பார்வையை போக்க வேண்டியது ஆளுனர் புரோகித்தின் கடமையாகும்.

தமிழ்நாட்டில் ஆளுனரின்கீழ் உள்ள 20 பல்கலை.கள் உட்பட மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களிலும் நடந்த ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி விரிவாக தொகுத்திருக்கிறது. ஆளுனர் அழைத்தால் எந்த நேரமும் அந்த ஊழல் பட்டியலை ஆளுனரிடம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் ஆளுனராக இருந்தால் அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஆணையிட வேண்டும். செய்வாரா? என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!