To stay holds children’s homes for children under the Youth Justice act must Register: District Administration Information
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை தங்க வைத்திருக்கும் நிறுவனங்கள் மட்டுமே குழந்தைகள் இல்லங்களாக கருதப்படும்.
இந்நிறுவனங்கள் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவ மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகிய தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2014இன் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும்.
குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் செயல்படுவது தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்கள், அரசாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் பேணப்படுவது அனைத்து நிறுவனங்களாலும் உறுதி செய்யப்படல் வேண்டும். மேற்கண்டவாறு உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத தனியார் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் உரிமம் பெறாத தனியார் விடுதிகளை நடத்தும் நிர்வாகிகளுக்கு உரிய சட்டத்தின் படி சிறைதண்டணை மற்றும் அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு குழந்தைகளை தங்க வைத்திருக்கும் குழந்தைகள் இல்லங்கள் இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திட சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினையும், விடுதிகள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2014இன் கீழ் உரிமம் பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலரை அணுகுமாறும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் இனிவரும் காலங்களில் இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு பெறாத குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். தற்போது பதிவு பெறாமல் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலனை உறுதி செய்யவும், கல்வியை தொடரவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு பள்ளி மற்றும் அரசு விடுதிகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இவ்வசதிகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.