Youth Forum should be ambassadors of government projects – Perambalur Collector Talk!
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா அமைப்பும், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையும் இணைந்து நடத்திய சர்வதேச எழுத்தறிவு நாள் மற்றும் இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
கிராமப்புறங்களில் செயல்படுகின்ற இளையோர் மன்றங்களுக்கு ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவின் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறும் வகையிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. இளைஞர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமாக விளங்குவதற்கு விளையாட்டு இன்றியமையாதது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 174 ஆண்கள் இளையோர் இளைஞர் மன்ற குழுக்களும், மகளிருக்கென 12 குழுக்களும் என மொத்தம் 186 இளையோர் இளைஞர் மன்ற குழுக்கள் இயங்கிவருகின்றது. இக்குழுக்களில் 5,022 இளைஞர்கள் உறுப்பினர்களாக நேரு யுவகேந்திராவுடன் இணைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதன் தொடக்கமாக பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் தலா 5 இளையோர் இளைஞர் மன்ற குழுக்களும், , வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 3 இளையோர் இளைஞர் மன்ற குழுக்களும், அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 இளையோர் இளைஞர் மன்ற குழுக்களும் என மொத்தம் 20 குழுக்களுக்கு தலா ரூ.4,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவை மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களை விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களாக ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இளைஞர்கள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு, உடலினை வலிமையாக வைத்துக்கொள்வதோடு, எந்தவித நோய்த்தொற்றும் ஏற்படா வண்ணம் தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அனைவரும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகப்பின்பற்ற வேண்டும், மற்றவர்களும் பின்பற்ற போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை கிராமப்புற ஏழை, எளிய மக்களிடம் விளக்கி அனைவரையும் பயன்பெறச்செய்யும் வகையிலான தூதுவர்களாக இளையோர் மன்ற இளைஞர்கள் விளங்க வேண்டும், என பேசினார்.
அதன்தொடர்ச்சியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் எழுத்தறிவு நாளினை முன்னிட்டு வளரிளம் பருவத்தில் தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் குறித்து திட்ட விளக்க உரையினை குழந்தை நல அலுவலர் பூரணி இளையோர் இளைஞர் மன்றத்தினருக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத்துறை அலுவலர் தமீமுன்னிசா, நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் சுருதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.