பெரம்பலூர்: இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை 29,571 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன – செய்தியாளர்கள் பயணத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தகவல்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய நான்கு வட்ட அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையம் பிப்ரவரி 24, 2015 முதல் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் செய்தியாளர் பயணம் இன்று நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பாஸ்போர;ட் விண்ணப்பிக்கும் முறையினை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது இ-சேவை மையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்த இ-சேவை மையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இ-சேவை மையம் மூலம் வருவாய் துறையின் ஒத்துழைப்போடு சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிட சான்றுகளும் மற்றும் சமூக நலத்துறையின் மூலம் முதல் பட்டதாரி சான்று, திருமண உதவித் தொகை பெறும் திட்டம், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்று, பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சான்றுகளும், பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும், ‘அ’ பதிவேடு, சிட்டா, மின்சாரக் கட்டணம்; போன்ற அனைத்து சேவைகளும் சிறப்பான முறையில் வழங்கபட்டு வருகிறது.
பொதுமக்கள் ஒரே இடத்தில் அனைத்து சான்றிதழ்களையும் பெறும் வகையில் இ-சேவை மையம் செயல்பட்டுவருகிறது. இப்போது மேலும் கூடுதல் சேவையாக பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் விண்ணப்பித்தல் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு நிரந்தர பதிவு செய்தல் போன்ற சேவைகளும் இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
2015 பிப்ரவரி 24 முதல் 2015 அக்டோபர; 15 வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் 5,312 சாதிச்சான்றுகளும், 10,560 வருமானச் சான்றுகளும், 6,030 இருப்பிடச்சான்றுகளும், 1,026 திருமண உதவித்தொகைக்கான சான்றுகளும், 1,082 முதல் பட்டதாரிக்கான சான்றுகளும், 54 பெண்குழந்தை பாதுகாப்பு சான்றுகளும், 5,271 பிளாஸ்டிக் ஆதார் அடையாள அட்டைகளும், அ-பதிவேடு 15 நபர்களுக்கும், சிட்டா 219 நபர்களுக்கும் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இரண்டு நபர்களுக்கு பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள இ-சேவை மையத்தின் மூலம் பாஸ்போர்ட் வழங்குவதற்கு பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இதுவைரை என மொத்தம் 29,571 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சேவை பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் உள்ளது. இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் புதிதாக விண்ணப்பிக்கவும் அல்லது புதுப்பிக்கவும் வழிவகை உள்ளது. பாஸ்போர்ட் சம்மந்தமாக விண்ணப்பிக்கும் நபர்கள் 21.06.1996க்குப் பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
பிறப்புச்சான்றிதழ் கொண்டு வரவேண்டும். ஆதார்அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்து வரவேண்டும். மேலும் 2009க்கு முன் திருமணமானவர்கள் திருமணச்சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை, ஆனால் 2009க்குப் பிறகு திருமணமானவர்கள் அவசியம் திருமணச்சான்று அளிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.1,655 செலுத்த வேண்டும். இதில் மத்திய அரசின் கட்டணமாக ரூ.1500ம், சேவைக்கட்டணமாக ரூ.100ம், வங்கி கட்டணமாக ரூ.55ம் ஆகமொத்தம் ரூ.1,655 செலுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்., என அவர் பேசினார்.
இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ், கேபிள் டிவி வட்டாட்சியர் தமிழரசன் ஆகியோர் உடனிருந்தனர்.