A single certificate for the DNT Community is becoming a mirage; making a promise and then refusing to fulfill it is a betrayal of trust: TTV Dinakaran!

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தென் மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் சமூகத்தினர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற ஒன்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீர்மரபு வகுப்பினர் (DNC) மற்றும் சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை இதுவரை பிறப்பிக்காமல் இருப்பதால் சீர்மரபினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக அவசரகதியில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த சீர்மரபினர் சமூகத்திற்கும் இழைக்கும் நம்பிக்கை துரோகம் ஆகும்.

தேர்தலுக்கு முன்பாக எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, ஆட்சிக்கு வந்தபின்பு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதும், மறந்து விடுவதும் திமுகவினரின் அடிப்படை குணம் என்பது, சீர்மரபினர் ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

எனவே, இனியும் சீர்மரபினர் சமூகத்தினரை ஏமாற்றாமல், சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுவதோடு, சீர்மரபினர் சமூகத்தினருக்கு சட்டப்பூர்வமான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்., என அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!