பெரம்பலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் கு.செல்வராசு விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டம், வடக்குமாதவி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் நிதியை கையாடல் செய்த கணக்காளர், முன்னாள் கணக்காளர் செயலாளர் பொருளாளர் ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வடக்குமாதவி கிராம வறுமை ஒழிப்புச் சங்க கணக்குகளை திட்டஇயக்குநர் கு.செல்வராசு கடந்த 23.05.2017 அன்று ஆய்வு செய்தார். அப்போது நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்குவதாக ஆவணங்களில் போலியாக பதிவு செய்து பணத்தை கிராம வறுமை ஒழிப்புச் சங்க கணக்காளர் பார்வதி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கணக்குகள் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உதவித் திட்ட அலுவலர் பெ. வெங்கடேசனுக்கு தெரிவிக்கப்பட்டது.

உதவித் திட்ட அலுவலர் ஆய்வில், கணக்காளர் பார்வதி நலிவுற்றோருக்கு பணம் வழங்குவதாக ஆவணங்கள் தயார் செய்து ரூ.54 ஆயிரம் கையாடல் செய்தது தெரிய வந்தது. மேலும், இதற்கு முன்னாள் கணக்காளர் சித்ரா என்பவர் உடந்தையாக இருந்ததோடு, இவர் பொது மக்களிடம் வசூல் செய்த தொகை ரூ.4500- கையாடல் செய்திருந்தார். கிராம வறுமை ஒழிப்புச் சங்க செயலாளர் கண்ணகி மற்றும் பொருளாளர் நாகேஸ்வரி ஆகியோர் காசோலைகளில் கையெழுத்திட்டு அரசுப் பணத்தை கையாடல் செய்ய உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் உதவித் திட்ட அலுவலர் அளித்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போன்று கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பில் நிதி முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!