Class X common exam centers in the district collector and visited in person
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் ஏப். 20 வரை பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை, 37 தேர்வு மையங்களில் 4,947 மாணவர்களும், 4,234 மாணவிகளும் என மொத்தம் 9,181 பேர் எழுதுகின்றனர்.
இன்றைய தேர்வு நடைபெறும் மையங்களில் பெரம்பலூர் மற்றும் எசனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மற்றும் எசனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களையும் அவர்களுக்கென்று செய்யப்பட்டுள்ள வசதிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 37 தலைமையாசிரியர்களும், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 2 தலைமையாசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 37 தேர்வு மையத்திற்கும் 37 துறை அலுவலர்களும், கூடுதல் துறை அலுவலராக 04 ஆசிரியர்களும், தேர்வு மையத்திற்கு 11 வழித்தடங்களில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 11 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 480 ஆசிரியர்களும், இத்தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற 52 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல் துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தேர்வில் 37 தேர்வு மையங்களில் 4,947 மாணவர்களும், 4,234 மாணவிகளும் என மொத்தம் 9,181 பேர் தேர்வு எழுத வேண்டியிருந்த நிலையில் 77 மாணவர்களும், 50 மாணவிகளும் என மொத்தம் 127 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக தேர்வு மையங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் தேர்வு நடைபெற்று வருகின்றது, என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.